Wednesday, 27 May 2015

சளி

முதலில் உணவில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில காலம் தவிர்க்கலாம். சுரைக்காய், தடியங்காய்(வெள்ளைப்பூசணி), மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளை 3-5 மாத காலம் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை கண்டிப்பாக எடுக்க வேண்டியிருப்பின் அவற்றில் மிளகுத்தூள் தூவி சாப்பிடவும். 
பால், தயிர் ,இனிப்பு இம்மூன்றும் நுரையீரலில் கபத்தைச்(சளியை) சேர்க்கக் கூடியன. இதனையும் கண்டிப்பாய்த் தவிர்க்க வேண்டும். சாக்லேட், ஐஸ்கிரீம் பக்கமும் போக வேண்டாம்.பழங்களில் எலுமிச்சை கமலாஆரஞ்சு தவிர பிற பழங்களுக்குத் தடையில்லை.

மிளகு ஒரு அற்புதமான மருத்துவ உணவுப்பொருள். பத்து மிளகு இருப்பின் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பார்கள். அதன் நச்சுமுறிக்கும் திறனே இப்பெருமைக்கு காரணம்.

மிளகு 4 ஐ எடுத்து தூளாக்கி, தேன் 1 ஸ்பூனில் கலந்து,லேசாக இளஞ்சூடாக்கி,1/4 டம்ளர் தண்ணீரில் கலந்து படுக்கும் முன்னர் பருகச் சொல்லுங்கள்.இருமல் நீங்கி இதமான தூக்கம் உறுதியாய் வரும்.

 பாசிப்பயறு கொஞ்சம் குளிர்ச்சி. குளிர் காலத்தில் இரவில் இதைத் தவிர்க்கவும். குறிப்பாய் ஆஸ்துமாக்காரர்க்கு இரவில் பொங்கல் வேண்டாம். மதிய உணவில் தூதுவளை ரசம் மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். சாதம் சாப்பிட ஆரம்பிக்கையில் மணத்தக்காளி வற்றலை வறுத்துப் போட்டு முதல் கவளையை சாப்பிட்டு பின் குழம்பு காய் சேர்த்து சாப்பிடுவது நல்லது. சளி இருகும் போது மோர் சாப்பிடலாமா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. மோர் சளி தராது. தயிர் தான் நல்லதல்ல. ’தயிரிலிருந்து தானே மோர் வருகிறது?’ என புத்திசாலியாய்க் கேட்பவர்க்கு பதில்- பண்பில் மோர் வேறு. தயிர் வேறு. தயிர் செரிமானத்தை மந்தப்படுத்தும். மோர் சீர்படுத்தும். தயிர் கபத்தை வளர்க்கும். மோர் பித்தம் நீக்கி, கபத்தை குறைக்க உதவும்.

மிளகுக் குடும்பத்தில் மற்றுமொரு ஜாம்பவான் திப்பிலி. ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொருள். சளி பிடித்துள்ள காலத்தில் திப்பிலியை இளவறுப்பாக வறுத்து பொடி செய்து தேனில் உணவிக்கு முன்னர் 3 சிட்டிகை அளவில் கலந்து சாப்பிட சளி குறையும். காலை காபிக்குப் பதில் முசுமுசுக்கை மற்றும் கரிசாலை உலர்ந்த இலைகளை கஷாயமக்கி, பனங்கருப்பட்டி சேர்த்துப் பருகி வந்தால், காலை வேளையில் துன்புறுத்தும் இளைப்பு உடனடியாகக் குறையும்.



அப்படி பிரைமரி காம்ப்பிள்க்ஸ் உள்ள குழந்தைகட்கு, சத்து மாவு மிக அவசியம். புழுங்கல் அரிசி,பார்லி அரிசி, உளுந்து, கேழ்வரகு, நிலக்கடலை, மக்காச்சோளம், முளைகட்டிக் காய வைத்த கொண்டைக்கடலை மற்றும் பாசிப்பயறு, முந்திரி, பாதாம் பருப்பு, ஏலக்காய், இவற்றை வறுத்து மாவாக திரித்து நீங்களே சத்துமாவைச் செய்து கொள்ளலாம். கஞ்சி காய்ச்சிய பின் இனிப்பிற்கு பனங்கருப்பட்டி அல்லது கற்கண்டு சேர்க்கவும். கொஞ்சம் சுக்குத்தூள் சேர்த்து சூட்டுடன் காலையில் சாப்பிட சொல்லவும். நான்வெஜ் பிரியமுள்ள குழந்தைக்கு பால் நண்டு சமைத்து கொடுக்கவும். நண்டும் சத்துமாவும் பிரைமரி காம்ப்ப்ளக்ஸ் உள்ள குழந்தைக்கான சிறப்பு உணவு.

உணவு மருந்துக்கு மாற்றல்ல . மருந்தை விரைவாக பணிபுரிய வைக்கவும், நோயை அணுக்காது தடுத்து வைக்கவும், வந்த நோயை விரைவாக உடல் நோய் எதிர்ப்பாற்றல் கொண்டு விரட்டவும் உணவால் மட்டுமே முடியும். என்ன, அந்த சிறப்பு உணவு வகையறாக்கள் சூப்பர் மார்க்கெட்டில் அடுக்கிவைக்கப்பட்டிருக்காது..சூப்பர் மம்மி தான் கொஞ்சம் மெனக்கிட்டு சமைத்துக் கொடுக்கணும்.




No comments:

Post a Comment